Skip to main content

Command Palette

Search for a command to run...

முடிவில்லா சூழல்

Updated
2 min read

சின்னையாவிற்கு வாழ்க்கை கொண்டு சென்ற பாதை கரடுமுரடாக காட்சியளித்தாலும் அவரின் ஆருயிர் மனைவி தனலட்சுமியால் கற்கண்டாகவே அமைந்தது. பொருளாதாரம் மங்கிய வருடங்களவை.

முத்து தஞ்சாவூரிலும், கடலூரிலும் ஓட்டல்கள் வைத்து காலூன்ற முயற்சி செய்து வந்தார். கணேசனும், கோபுவும் அண்ணனுக்கு உறுதுணை. அன்று மட்டுமல்ல இன்றும் கூட. வறுமை — வரலாற்றுக்கு விருந்து வைப்பதில் திறமைசாலி, ஒருபிடி தன்னம்பிக்கை மட்டுமே போதும் தப்பித்துக்கொள்ள. நிறையவே இருந்தது முத்துவிடம்.

“அவனும் அங்கிட்டுமிக்கிட்டும் ஓட்டல் வக்கிறான், கருப்பந்தான் துணையிருக்கணும்” சொல்லிக்கொண்டேயிருப்பார் வீரம்மாள்.

நள்ளிரவு முடிந்தவுடனேயே விடியற்காலையென்று யார் சொல்லி ஏமாற்றினாரோ தனலட்சுமியை, தூங்கும் நேரம் மின்னல் வேகத்தில், எழுந்தவுடன் வீட்டு வேலைகளை முடித்துவிடுவார். ரஷ்யாவின் போர் விமானம் போல பஸ் ஸ்டாண்டுக்கு சென்று நிற்கும் அவரின் வேகத்தை குறைப்பது போலவே செல்லும் பேருந்து. வேகமாய் சூழல்வது பொருட்ச்செல்வம் சேர்த்து வாழ்வதற்கில்லை, குழந்தைகளின் எதிர்காலத்திற்காகவே. தனலட்சுமிக்கு எதையும் நின்று ரசிக்க நேரமில்லாமல் போனதால்தானென்னவோ ஞாயிறு மதியங்களை துவங்கினர் போல.

பார்க்க இந்தத் தொடர் போராட்டத்தில் இருப்பவர் போலவே இருக்கமாட்டார், வீடுகளில் தொங்கும் சரஸ்வதிப் படத்தைப்போலவே உண்மையில் காட்சியளிப்பார் — நிலையான செல்வங்களோடு மட்டும். இறுக்கமான அந்த பரபரப்புச்சூழலால் அவரின் அன்பான குணத்தையும், மரியாதைகலந்த அமைதியான பேச்சையும் இம்மியளவும் அசைக்க முடியவில்லை.

போர்க்கால உணவுப்பொட்டலங்கள் போலவே ஊர்ப் பயணங்கள் அமையும். மூன்றுவருடமோ, நான்குவருடமோ ஊருக்கு போய் தலையைக்காட்டி விட வேண்டும்.

விடியாத அந்த இரவில் ஸ்டேஷன் அருகில் வந்தவுடன், கண்ணனில்லாமலேயே குழலூதியது ரயில். இன்று அண்ணனும் அவர் குடும்பமும் வருமென்ற தகவல் தெரிந்த கோபு, அமைதியான அந்தக் காட்டுப்ப்பாதையில் — பாலில் கரையும் காப்பிப்பொடிபோல புழுதியைக் காற்றில் கலக்கிவிட்டு சைக்கிளைச் செலுத்தினார். கோபு — துடிப்பான இளம்வயது. கோபுவை நினைத்தாலே வெள்ளையுடையும் பாண்ட்ஸ் பவுடர் மணமும் இன்றும் பலரின் நினைவில் வந்து செல்லும். ரயில் நிலையத்தில் நுழையும்போது வேகமாய் கைக்குட்டையில் நெற்றிமீது பூத்த வியர்வை மலர்களைக் கொய்து கொண்டார். சிகப்பு ரோஜா கமலின் தொப்பி மட்டுமே இல்லை.

வீட்டில் குழந்தைகளைப் பார்த்ததும் வீரம்மாளும், மூத்தவர் மனைவி அழகும், தங்கை வள்ளியும் வாரியணைத்தனர்.

“முத்துவும், மணியும் இன்னும் வரல, நாலகழிச்சுதான் வருவாங்க.”

“மனோகரன் இந்த வருஷம் வாரதா கடுதாசி போட்டுருக்கு, எங்குட்டோ ராணிப்பேட்டைல வேலையாம்”

வள்ளியின் பாணியிலையே செய்திகள் வாசித்து முடித்தார்.

அனைவரும் வந்தபின், பல்குகளின் சப்தம் கேணியில் கத்திய எதிரொலி போலவே கேட்டுக்கொண்டே இருக்கும். இரவுப்பறவை சிலகாலம் அந்த வீட்டருகில் வந்து கத்துவதை மறந்தே போனது. தனலட்சுமியும், வள்ளியும், மணியும் இவர்களின் சேட்டை தாங்காமல் திட்டுவது படத்திற்கு வண்ணம்தீட்டுவது போலவே இருந்தது. ஏனோ இன்றைய பெற்றோராய் மாறிய பிள்ளைகள் இதைக் கற்க மறந்தனர்!!

“லீவு முடிஞ்சிருச்சு, நாலக்கழிச்சு ஊருக்கு போகணும் அத்தை”

வீரம்மாளின் கோட்டையில் பெட்டிஷன் போட்டு வைத்தார் தனலட்சுமி. இரவில் மட்டும் கேட்கும் கடிகார முட்களின் சத்தம் அன்று அமைதியை விரும்பாமல் இரவிற்கு முன்னரே கத்தத்துவங்கியது.

காட்டாறு கம்பெனிக்கு செல்ல ஆயுத்தமானது. அடுத்த சில மாதங்கள்/வருடங்கள் ஓடப் போதுமான இடைவெளி எடுத்தது போலவே திரும்பினர் சின்னையாவும் தனலட்சுமியும்.

“எப்படியாவது படிக்க வச்சிரணும், நல்ல பள்ளிக்கூடம், யாரையும் எதிர்பாக்காம வாழனும், படிப்பு மட்டுமே முக்கியம்”

அதிகமான தன்னம்பிக்கையும், மூழ்கச்செய்யும் அன்பும் இந்தக் காற்றுச்சுழலில் ஒலித்துக்கொண்டே வருகிறது, தனலட்சுமியின் நினைவாக.

மேலும் சுழலும்.

More from this blog

மீட்சி..

பொழுது புலர்ந்து வெயில் சூடு கூட உடலில் தெரியவில்லை, குளிரென்றும் கூற முடியாது, காசிக்கு பீடிக்கட்டு தேவைப்பட்டது. முற்றத்திலுள்ள மாடுகளை அவிழ்த்துவிட்டு அறைக்குள் எதையோ வேகமாய் எடுக்க சென்றார். காசி — காசி விஸ்வநாதன் — ஒரே மகன் — கேட்டவுடன் கிடைக்கா...

May 30, 20252 min read

கயற்றுக்கட்டிலும் காண்டஸாவும்

காற்றும் வெயிலும் காதல் செய்யும் பகல் நேரம், வெயில் லேசாகவும் காற்று சூடாகவும் வீசும். வெப்பக்காற்றேன்று பலர் வெளியில் செல்லத்தயங்கும் நேரம். கருப்பையா அதிலிருந்து தப்பிச்செல்ல ஒரு நேர்த்தியைக் கையாண்டார். வியர்த்த முகத்தை துடைப்பதில்லை, என்னதான் அனல...

May 30, 20252 min read
D

Dreamer

6 posts