கயற்றுக்கட்டிலும் காண்டஸாவும்

காற்றும் வெயிலும் காதல் செய்யும் பகல் நேரம், வெயில் லேசாகவும் காற்று சூடாகவும் வீசும். வெப்பக்காற்றேன்று பலர் வெளியில் செல்லத்தயங்கும் நேரம். கருப்பையா அதிலிருந்து தப்பிச்செல்ல ஒரு நேர்த்தியைக் கையாண்டார். வியர்த்த முகத்தை துடைப்பதில்லை, என்னதான் அனல்காற்றேன்றாலும், முகத்தில் தண்ணீரைக் கண்டதும், கனிந்ததே சென்றது.
கயிற்றுக்கட்டிலில் அவர் வாழும் வாழ்க்கை, சற்று நின்று பார்ப்பவருக்கு நிம்மதிப் பெருமூச்சை இலவசமாக அளிக்கும். நார்க்கயரில்தான் கட்டுவார், அதுவும் அவர்தான் கைத்தறி போல நெய்யதுகொள்வார். கட்டிலில் கைத்துண்டை விரித்து மல்லாந்து படுத்து, வானத்தைப் பார்க்கும்பொழுது, கதிர்நிறை சூரியன் கைத்தடியுடன் சென்றுவிடும். பல எண்ணங்கள் மனதில் தோன்றினாலோ, பசியில்லையென்றாலோ, தூங்குமெண்ணமில்லையென்றாலும் நார்க்கயிறு கட்டில் நாட்கணக்கில் கூட அரவணைத்துக்கொள்ளும்.
மனைவி மீனாட்சிக்கு அவர் மீது பலநேரங்கள் கோவம் வந்தாலும், அதிருப்தி ஏற்பட்டாலும், கருப்பையாவின் கயிற்றுக்கட்டில் பயணங்களை ரகசியமாய் ரசித்துக்கொள்வாள். சந்தைக்கு சென்று வரும் சிலநேரங்களில், அவ்வையளித்த நெல்லிக்கனி போல, கயிற்றுருண்டை வாங்கி வந்து தருவாள். Valentines day கிப்டாக எண்ணிக்கொண்டாளோ என்னவோ.
மாலை நேரம் நெருங்க, வீட்டின் பின்புறம் சென்றுவிடுவார் கருப்பையா — புதிதாக வந்த நான்கு வழிச்சாலை, வண்டாக வாகனவரிசை, ரீங்காரம் பழகியே போனது. தன் கட்டிலில் செல்லும் மனப்பயணங்களை விட தூரம் குறைவாகவே செல்லும் அந்த வாகனங்களை வேடிக்கைப் பார்ப்பதில் ஏனோ ஒரு திருப்தி — யாரோ இருவர் வாய்ச்சண்டையை வேடிக்கைப் பார்க்கும் சிறுவன்போலத்தான் — வஞ்சனையில்லாமல் வேடிக்கை.
எத்தனை எத்தனை வண்டிகள் சென்றாலும், மீன்கொத்திப் போல அவர் கண்ணுக்கு மட்டுமே புலப்படும் — காண்டஸா. கொத்திக்கொள்ள மட்டும் இன்னும் நேரம் அமையவில்லை. ஒருமுறையாவது சென்றுவிட வேண்டும், சிறுவயது முதலே ஆசை. தன்னுடைய சருகு வாசனை, குளிர்நிழல், கைத்துண்டு மெத்தைக் கட்டிலைவிட காண்டஸாவில் என்னதான் இருக்கிறதென பார்த்தேவிடவேண்டும். பொருள் சேர்ப்பதில் நாட்டமில்லை, நாளுக்கு நாள் போராட்டமில்லாமல் வானிலிருந்து தோன்றி மண்ணில் மறையும் மழைத்துளியில் ஒன்றுதான் கருப்பையாவும்.
அந்தி மாலை நெருங்கும் நேரம் — நிறங்கள் ஓய்வெடுக்கச்செல்லும் — கருப்பு வெள்ளைக்கோலமே இவ்வுலகம். அனைத்துமே வண்ணங்களை உதறிப் புத்தாடை அணிந்து கொள்ளும். கண்டு ரசித்தவர்கள் வெகுசிலரே, கருப்பையா இவ்விசயத்தில் விடுப்பே எடுத்ததில்லை.
இரவு வீடு வந்து விடுவார் — வழக்கம்போல கட்டில் பயணம்தான், என்றாவது கண்ணில் தோன்றும் காண்டஸாக்களை கண்ட இரவுகள் தூக்கமில்லாமல் உறுமீன் போல உருண்டுகொண்டே இருப்பார். கட்டிலின் கீச்சு சத்தங்கள் — கட்டிலும் அவரும் ரகசியம் பேசுவது போலவே தோன்றும் மீனாட்சிக்கு.
கன்னித்தீவைப் போலில்லாமல் காலம் சற்று வேகமாகவே பயணிக்கும். கருப்பையாவின் காண்டஸாக் காதல் சற்று முற்றிவிட்டது. மதிலேறும் மணாளனைப்போல முடிவெடுத்துவிட்டார். கதிரவன் கரங்கள் சற்றே தைரியத்தோடு பூமியைத் தொட முடிவெடுத்த தருணம், கிணற்றடியில் குளிக்கச் சென்றார். குளியல் — ஏனோ இப்படியொரு விநோதப் பெயர், நீராடல் என்பதே பலமுறை சரியான பெயெரெனத் தோன்றியது. கருப்பையாவிற்கும் நீருக்கும், அறிவியலைத்தாண்டி ஈர்ப்பு சக்தி அதிகமாகவே இருந்தது. ஆடல் முடிந்ததும், அவசரமாக அரக்கைச் சட்டையை அணிந்து ரோட்டுக்குச்சென்று நின்றார்.
காத்திருப்பு — காதலின் அடுத்த பகுதி — நரைவயதில் நடைமுறையாய்தான் தோன்றியது கருப்பையாவிற்கு. இருக்கை இருக்கும் பேருந்தைத் தேடும் பயணி போலவே தேடிக்கொண்டிருந்தார் — துடிப்பான கண்களோடு. புல்லீரம் காயத்துவங்கியது — அதீத தாகத்தில் புல்லின் ஈரம் ஏன் காற்றின் வழியாக நமக்குச்சேரவில்லை, கேள்வியோடு நின்றார். சற்றும் எதிர்பாராத நேரம், தோன்றியது காண்டஸா. இமையோரப் புன்னகை மலர கையை உயர்த்தினார். கையில் ரோஜா மொட்டுக்கள்கூட இல்லை, பரிசளிக்க.
நின்றது. முதல்முறை அருகில் நிற்கும் சுகம் — யாப்பிலக்கணம் இன்னும் இதற்கான வார்த்தைத் தேடலை முடிக்கவில்லை.
“மணச்சை வரைப் போகணும்”
அவசரமில்லாமல் கேட்டார். கிடைத்தது.
பயணங்கள் தொடரும்.

